
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
இதனிடையே மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க என்னென்ன வழிகள் உள்ளது என்பதை ஆராய்ந்து, விரைந்து செயல்படுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சரியான விகிதத்தில் சொத்து வரி கணக்கிடவும், தொழில்வரி வசூலிப்பதை தீவிரப்படுத்தவும் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட கட்டண வாகன நிறுத்தங்களில் வசூலை முறைப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாகன நிறுத்தம்
வாகன நிறுத்தத்தின் கட்டணங்கள் ஆன்லைனில் மாற்ற திட்டம்
ஆணையரின் நடவடிக்கையின்படி, சென்னையின் பிரபல கடற்கரைகளான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டண வசூல், வருவாய் பங்கீட்டு அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் அதிகளவு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டண வசூல் சேவை, அரசு சார்பு நிறுவனமான டெக்ஸ்கோவிற்கு (TEXCO) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்போதைய கட்டண வசூல் முறைகள் பிஓஎஸ் (POS) இயந்திரம் மூலம் மட்டுமே செய்யப்படும்.
அதை மேலும் நவீனப்படுத்தும் வகையில், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஃபாஸ்ட் டேக் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதோடு ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.