ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகரும் இந்த புயலால் வட தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ளது. மழை அதிகரிப்பைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் தனது செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கைகளை செயல்படுத்த ஐடி நிறுவனங்களை அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் போன்ற முக்கிய வழித்தடங்களில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடும் மழையின் போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அல்லது தேர்வுகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை நோக்கி முன்னேறும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அபாயங்களைக் குறைக்க அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.