ரத்தக் களறியான பங்குச்சந்தை: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி காலி! சரிவிற்கான காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
கடந்த மூன்று நாட்களாக லாபத்தில் இருந்த இந்தியப் பங்குச் சந்தை, இன்று (மார்ச் 19) காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 1,953 புள்ளிகள் சரிந்து 74,751 என்ற அளவிலும், நிஃப்டி 580 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,198 என்ற அளவிலும் வர்த்தகமாகின. இந்தத் திடீர் சரிவால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடி துடைத்து எறியப்பட்டுள்ளது. சரிவிற்கான காரணங்கள் பின்வருமாறு:-
விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்வு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாலும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு $110 என்ற அளவைத் தாண்டியுள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பொருளாதார சுமையாகும். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. மேலும், பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையாததால், இந்த ஆண்டில் வட்டி விகிதக் குறைப்பு ஒரு முறை மட்டுமே இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் இன்று 8% வரை சரிந்தன. வங்கியின் பகுதிநேரத் தலைவர் அதானு சக்ரவர்த்தி பதவியை ராஜினாமா செய்ததும், வங்கியின் சில நடைமுறைகள் தனது அறநெறிகளுக்கு அப்பாற்பட்டவை எனக் குறிப்பிட்டதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்
உலகளாவிய சந்தை தாக்கம்
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் சந்தை நேற்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று ஜப்பானின் நிக்கி (2.5%), ஹாங்காங்கின் ஹாங் செங் (1.4%) உள்ளிட்ட ஆசியச் சந்தைகளும் சிவப்பு நிறத்திலேயே வர்த்தகமாகின்றன. அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி விகிதம் 4.26% ஆக உயர்ந்துள்ளது. இது பொதுவாகப் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறிப் பத்திர சந்தைக்குச் செல்ல வழிவகுக்கும். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து 14வது நாளாக இந்தியப் பங்குகளை விற்று வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் ரூ. 2,714 கோடி மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
லாப நோக்கம்
லாப நோக்கத்திற்காக விற்பனை
கடந்த மூன்று நாட்களில் சென்செக்ஸ் சுமார் 3,000 புள்ளிகள் உயர்ந்திருந்தது. இந்த உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை வெளியே எடுக்க முற்பட்டதும் இன்றைய சரிவிற்கு ஒரு காரணமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 92.63 என்ற வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. இறக்குமதி செலவுகள் அதிகரிப்பது ரூபாய் மதிப்பை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எதிர்காலம்
இனி என்ன நடக்கும்?
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் தணியாத வரை சந்தையில் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கச்சா எண்ணெய் விலை $110க்கு மேல் நீடித்தால், அது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியையும் பாதிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், நிபுணர்களின் கருத்துப்படி, நிஃப்டி 23,111 புள்ளிகளுக்குக் கீழ் சென்றால் வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக்கூடும். 23,450 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றால் மட்டுமே சந்தை மீண்டும் வலிமை பெற வாய்ப்புள்ளது.