Page Loader
கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 30, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. நவம்பர் 29இல் புயலாக உருவெடுத்த ஃபெஞ்சல் இன்று மாலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று உள்ளிட்ட கடுமையான வானிலை நிலவுகிறது.

பயணிகளுக்கு சிரமம்

விமான சேவை தடையால் பயணிகளுக்கு சிரமம்

நவம்பர் 29 ஆம் தேதி மாலை தொடங்கிய கனமழை தீவிரமடைந்து சென்னையில் பல சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், இண்டிகோவால் இயக்கப்படும் மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற இடங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மறு திட்டமிடப்பட்ட விமானங்களை எதிர்பார்த்து விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.