
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மற்றும் வங்கக் கடலில் காற்று சுழற்சிகள் அடிக்கடி உருவாகும் நிலை காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வடகடலோர மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், இன்று தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை
அதிகரிக்கும் மழை வாய்ப்பு
வடகிழக்கு திசையில் இருந்து உருவாகும் புதிய காற்று சுழற்சி வங்கக் கடலில் உள்ள மற்றொரு சுழற்சியுடன் இணையும் சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் மழை தீவிரமடையும் என்றும், கிழக்கு மற்றும் மேற்கு காற்றுகளின் இணைப்பால் காற்று குளிர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது 14ம் தேதிக்கு பிறகு 20ம் தேதி வரை தமிழகத்தில் பலத்த மழைக்கான சூழலை உருவாக்கும்.
சென்னை
சென்னையில் வெப்பநிலை
சென்னையில் நேற்று 102°F (சுமார் 39°C) வெப்பநிலை பதிவாகியது. இன்றும் இதே அளவிலான வெப்பநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முதல் 13ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.