LOADING...
1.5 லட்சம் காலாவதியான அமுல் தயாரிப்புகளில் தேதியை மாற்றி விற்பனை செய்ய முயற்சி
அமுல் தயாரிப்புகள் அழிப்பு

1.5 லட்சம் காலாவதியான அமுல் தயாரிப்புகளில் தேதியை மாற்றி விற்பனை செய்ய முயற்சி

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
10:54 am

செய்தி முன்னோட்டம்

ஜெய்ப்பூரில் காலாவதியான 1.5 லட்சம் கிலோ அமுல் (Amul) தயாரிப்புகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து அழித்தனர். சுமார் 27 லாரிகளில் ஏற்றப்பட்ட இந்த பொருட்கள் நான்கு நாட்களாக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. ஜெய்ப்பூரின் கோ நகோரியன் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யத் தயாராக வைத்திருப்பதாக 181 ஹெல்ப்லைன் மூலம் புகார் வந்தது. இதன்பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், நூடுல்ஸ், கெட்ச்அப், மயோனைஸ் மற்றும் எனர்ஜி டிரிங்க்ஸ் போன்ற பால் அல்லாத அமுல் தயாரிப்புகள் கண்டறியப்பட்டன. சுமார் 12,000 கார்டன்களில் காலாவதி தேதி முடிந்திருந்தது தெரியவந்தது.

அமுல்

அதிர்ச்சியளித்த உரிமையாளர்

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், 3,000 கார்டன்களில் பழைய காலாவதி தேதியை அழித்துவிட்டு புதிய தேதியை அச்சிட உரிமையாளர் முயன்றுள்ளார். இதற்காக அசிட்டோன் (Acetone) மற்றும் பிற ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலாவதி தேதியை மாற்றும் முறையைத் தான் யூடியூப் மூலம் கற்றுக் கொண்டதாக அவர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கிடங்கின் உணவு உரிமமும் காலாவதியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் இத்தகைய மோசடி செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement