Loading...
மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை

மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
11:14 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதல் தலைமை நிர்வாக நீதிபதி அஸ்வினி பன்வார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையில் பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் அவருடன் இணைக்கப்பட்ட முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாததால், அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

பின்னணி

2023இல் வெடித்த போராட்டம் மற்றும் வழக்கின் பின்னணி

கடந்த 2023 ஆம் ஆண்டு வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி ஒலிம்பிக் மல்யுத்த விளையாட்டு வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து பல மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங் தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை அவர் மீது 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன.

உண்மை வென்றுள்ளது

பிரிஜ்பூஷன் சரண் சிங் நெகிழ்ச்சிப் பேட்டி

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசிய பிரிஜ்பூஷன் சரண் சிங், ஆரம்பத்திலிருந்தே தான் குற்றமற்றவன் என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகத் தெரிவித்தார்.

"என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைய என நிரூபிக்கப்பட்டால் நானே தூக்கிட்டுக் கொள்கிறேன் என்று முதல் நாளிலேயே கூறியிருந்தேன்.

இன்று நீதிமன்றம் என்னை விடுதலை செய்திருப்பது எனக்கு மட்டுமின்றி எனது ஆதரவாளர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது." என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தீர்ப்பு இந்திய விளையாட்டு உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT