Loading...
விண்வெளியில் நிகழ்ந்த மாபெரும் விபத்து! நிலவில் 728 அடி அகல புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா
நிலவில் 728 அடி அகல புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா

விண்வெளியில் நிகழ்ந்த மாபெரும் விபத்து! நிலவில் 728 அடி அகல புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்த நாசா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
11:15 am

செய்தி முன்னோட்டம்

நிலவை ஆய்வு செய்து வரும் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (LRO) விண்கலம், நிலவின் மேற்பரப்பில் 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் விண்கல் அல்லது வால்நட்சத்திரத் துகள் மோதியதால் உருவான மாபெரும் புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்துள்ளது. நிலவின் நமக்குத் தெரிந்த பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளம் சுமார் 728 அடி (222 மீட்டர்கள்) அகலமும், 141 அடி (43 மீட்டர்கள்) ஆழமும் கொண்டது. சமீபத்திய காலத்தில் விண்கல் மோதலால் உருவான விண்வெளி பள்ளங்களிலேயே இதுதான் மிகப்பெரியது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அரிதான நிகழ்வு

132 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிதான விண்வெளி நிகழ்வு

இந்த அளவு பெரிய பள்ளத்தை உருவாக்கும் அளவிலான விண்கல் மோதல்கள் சராசரியாக 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என்பதால், இது அறிவியல் உலகிற்கு ஒரு அரிதான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

2024-ல் இந்த மோதல் நிகழ்ந்தபோது பூமி அல்லது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளால் இது உடனடியாகக் கண்டறியப்படவில்லை.

பின்னர் LRO விண்கலம் எடுத்த தரவுகளை ஆய்வு செய்தபோது, 2025 ஆகஸ்ட் மாதத்தில் விஞ்ஞானிகள் இந்தப் பள்ளத்தைக் கண்டறிந்தனர்.

மறைந்த பிரபல விண்வெளி ஆய்வாளர் தாமஸ் மெக்கட்சியன் அவர்களின் நினைவாக இப்பள்ளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

100கிமீ

100 கிமீ தூரத்திற்கு சிதறிய நிலவின் பொருட்கள்

இந்த அதிபயங்கர மோதலால் நிலவின் அடிப்புறத்தில் இருந்த பாறைகள் மற்றும் தூசிகள் சுமார் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுற்றளவுக்கு நாலாபுறமும் சிதறியுள்ளன.

நிலவின் மேல் அடுக்கில் உள்ள மண் எவ்வாறு விண்கல் மோதல்களால் கிளறிவிடப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது.

சராசரியாக 80,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவின் மேல்மட்ட மண் இத்தகைய மோதல்களால் முற்றிலும் தலைகீழாக மாற்றப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

புதிய சவால்

எதிர்கால நிலவு மனித திட்டங்களுக்கு புதிய சவால்

நாசா தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், அங்கு நிலையான விண்வெளி மையங்களை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற பெரிய விண்கல் மோதல்கள் ஏற்படும் போது சிதறும் பாறைத் துகள்கள் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வது, நிலவில் கட்டப்படும் ஆராய்ச்சி மையங்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகும்.

மேலும், நிலவில் மனிதர்கள் பதித்த காலடித்தடங்கள் என்றென்றும் அழியாமல் இருக்கும் என்ற கூற்றை பொய்மைப்படுத்தும் வகையில், இத்தகைய தொடர் மோதல்களால் அவை காலப்போக்கில் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ADVERTISEMENT