Loading...
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: பின்னணி என்ன?
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை: பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
09:13 am

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCIB) காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தீவிர சோதனை

திருச்சியில் போலீஸ் குவிப்பு & தீவிர சோதனை

சென்னையில் இருந்து இரண்டு காவல் வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நடைபெறும் வேளையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பு கருதி அன்பில் மகேஷின் இல்லத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சோதனை நடைபெறும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் வீட்டில் இல்லை என்று கூறப்பட்டாலும், அங்கிருக்கும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பின்னணி

பல கோடி ரூபாய் முறைகேடு புகார்: வழக்கின் பின்னணி என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் மற்றும் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, தகுதியற்ற பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவும், சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையிலுமே தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

திமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் வீட்டில் அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்தச் சோதனை நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT