விண்வெளியில் ஆயுதங்களை இறக்கிய அமெரிக்கா! போருக்குத் தயாராகிறதா விண்வெளி?
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில், புவிச் சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்க விண்வெளிப் படை முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க விமானப் படைச் செயலாளர் டிராய் மேங்க், "எதிரி நாடுகளின் விரோத நடவடிக்கைகளில் இருந்து நமது படைகளைப் பாதுகாக்கும் திறன் கொண்ட விண்வெளி கட்டுப்பாட்டு ஆயுதங்கள் தற்போது சுற்றுப்பாதையில் தயார் நிலையில் உள்ளன" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பின்னால் சீனா மற்றும் ரஷ்யாவின் தீவிர விண்வெளி ராணுவ மயமாக்கல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
விவரங்கள்
விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களின் விவரங்கள்
விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதங்களின் துல்லியமான விவரங்கள் மற்றும் எண்ணிக்கையை அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிப்படுத்த மறுத்துவிட்டது.
எதிரி நாட்டின் விண்வெளித் திறன்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சொந்த விண்வெளி சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இயக்கவியல் மற்றும் இயக்கவியலற்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அமைப்புகள் தற்காப்பு பயன்பாடுகளுக்கு மட்டுமன்றி, தேவைப்படும்போது தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
சீனா - ரஷ்யாவின் போட்டி மற்றும் 1967 ஒப்பந்தம்
சீனா, செயற்கைக்கோள்களை எதிர்க்கும் திறன்களைத் தீவிரமாக உருவாக்கி வருகிறது.
ரஷ்யா, விண்வெளியை ஒரு போர் மண்டலமாகக் கருதுவதோடு, அங்கு ஆதிக்கம் செலுத்துவதே எதிர்காலப் போர்களைத் தீர்மானிக்கும் என நம்புகிறது.
அமெரிக்காவோ, சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், தனது விண்வெளி மேலாதிக்கத்தை தக்கவைக்கவும் தற்போது ஆயுதங்களை அறிவித்துள்ளது.
1957-இல் 'ஸ்புட்னிக்' ஏவப்பட்டதில் இருந்தே விண்வெளி ராணுவமயமாக்கல் தொடங்கியது.
இருப்பினும், 1967-ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின்படி, விண்வெளியில் அணுஆயுதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை (WMDs) நிறுவுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், செயற்கைக்கோள்களை முடக்கும் அல்லது தாக்கும் பிற தொழில்நுட்பங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.