18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது. "உறுதித்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான உருவாக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில் எட்டப்பட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், பொருளாதார தடைகளுக்கு எதிர்ப்பும், பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வரி
ஒருதரப்பு வரிகளுக்கும் பொருளாதார தடைகளுக்கும் எதிர்ப்பு
உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு புறம்பாக விதிக்கப்படும் ஒருதரப்பு வர்த்தக வரிகள் மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பெயரால் விதிக்கப்படும் மறைமுகப் பாதுகாப்புவாத வரிகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரமில்லாத பொருளாதார தடைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டித்துள்ளது.
வர்த்தகப் பரிவர்த்தனை
உள்ளூர் நாணயங்களில் வர்த்தகப் பரிவர்த்தனை
பிரிக்ஸ் அமைப்புக்கான தனி ஒரே நாணயத்திற்கு பதிலாக, உறுப்பு நாடுகளின் உள்ளூர் நாணயங்களிலேயே வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிவர்த்தனைகளை அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற 'பிரிக்ஸ் கட்டண பணிக்குழு' மூலம் பணப்பரிவர்த்தனை அமைப்புகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதம்
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ராஜதந்திர வெற்றி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலை போக்கின்றி 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் தூதரக முயற்சியின் பயனாக, ஏப்ரல் 2025-இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இம்மாநாடு பகிரங்கக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா
ஐ.நா மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக இடம் பெறவும், முக்கிய பங்காற்றவும் ரஷ்யா மற்றும் சீனா தங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தின.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியிலும் வளரும் நாடுகளுக்கு அதிக வாக்கு உரிமையும் பிரதிநிதித்துவமும் அளிக்கும் வகையில் சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு
மேற்கு ஆசிய அமைதி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு
காசாவில் உடனடி போர் நிறுத்தம், மனிதநேய உதவிகள் தடையின்றி கிடைப்பது மற்றும் 1967 எல்லைகளின் அடிப்படையிலான இரு-நாடுகள் தீர்வை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
'க்ளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.