Loading...
லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்
லண்டன் தேம்ஸ் நதியில் கங்கை ஆரத்தி

லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. சின்மயா மிஷன் யுகே அமைப்பானது, லண்டனின் வருடாந்திர டோட்டலி தேம்ஸ் திருவிழாவுடன் இணைந்து இந்த ஆன்மீக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது. இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் புகழ்பெற்ற ஆரத்தியை நினைவூட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஆன்மீகம்

சின்மயா மிஷனின் 75 ஆண்டுகள் மற்றும் ஆன்மீக பாரம்பரியம்

சின்மயா மிஷன் அமைப்பின் 75வது ஆண்டை உலகளாவிய ரீதியில் கொண்டாடுவதன் ஒரு பகுதியாகவே இந்த ஆரத்தி நிகழ்வு நடத்தப்பட்டது.

இயற்கை, அறிவு மற்றும் மனித உணர்வுகளின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த விழா அமைக்கப்பட்டிருந்தது.

வேதாந்தத்தின் காலத்தால் அழியாத தத்துவங்களை ஹிமாலயத்தில் இருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்தவர் அமைப்பின் நிறுவனர் சுவாமி சின்மயானந்தா ஆவார்.

அந்த மகத்தான மரபைக் கொண்டாடும் வகையில், எல்லைகளைத் தாண்டிய ஆன்மீக அறிவையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தவே லண்டனில் இது சாத்தியமாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தேம்ஸ் நதியில் கங்கை ஆரத்தியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தி

லண்டனின் ஓல்ட் ராயல் நேவல் காலேஜ் பின்னணியில் நடைபெற்ற இந்த ஆரத்தி விழாவில், தேம்ஸ் நதியின் தூய்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

பாரம்பரியமாக நீரில் மிதக்கவிடப்படும் தீபங்களுக்குப் பதிலாக, சுடர்கள் அனைத்தும் நதிக்கரையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், கழிவுகளை முறையாக மேலாண்மை செய்தல் என சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாமல் இந்த ஆன்மீக விழா மிக நேர்த்தியாக நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

வரவேற்பு

இயற்கை வழிபாடு மற்றும் லண்டன் வாழ் மக்களின் அமோக வரவேற்பு

பிரிட்டிஷ் இந்துக்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினர் மட்டுமன்றி பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்களும் இந்த நதி வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய இசை, வேத மந்திரங்கள் மற்றும் பிரமாண்ட அடுக்கடுக்கு நெய் விளக்குகளுடன் இந்த ஆரத்தி நடத்தப்பட்டது.

இயற்கை அன்னையை வெறும் பிரார்த்தனையால் மட்டும் தொழுதால் போதாது, அதைச் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை இந்த விழா லண்டன் வாழ் மக்களுக்கு உணர்த்தியது.

ADVERTISEMENT

வருடாந்திர நிகழ்வு

வருடாந்திர விழாவாக மாறப்போகும் வரலாற்று நிகழ்வு

1951ல் தொடங்கப்பட்ட சின்மயா மிஷன் இயக்கம் தற்போது உலகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது.

லண்டனில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த கங்கை ஆரத்தி விழாவிற்கான கட்டண நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் அமோக ஆதரவைத் தொடர்ந்து, இந்த கங்கை ஆரத்தி விழா இனி வரும் ஆண்டுகளில் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறும் ஒரு வழக்கமான விழாவாக மாற வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT