Loading...
செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் கொடூரம்: லாஸ் ஏஞ்சலஸில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 3 பேர் பலி

செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் கொடூரம்: லாஸ் ஏஞ்சலஸில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 3 பேர் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
10:52 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சாட்ஸ்வொர்த் பகுதியில், பேருந்து விபத்து குறித்த செய்தியைச் சேகரிக்க சென்ற செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகச் சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சான் பெர்னார்டோ பள்ளத்தாக்கு பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், மேசன் அவென்யூ பகுதியில் உள்ள வணிக வளாக வாகன நிறுத்துமிடத்திற்கு இடையே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்திற்குச் சில வினாடிகளுக்கு முன்பாக ஹெலிகாப்டரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய காட்சி, ஹெலிகாப்டருக்குள் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

பலி

3 பேர் பலி & தரையில் இருந்தவர் மீதும் மோதல்

சம்பவ இடத்திற்கு விரைந்த லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புத் துறையினர் (LAFD) ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

மேலும் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 3 பேரில் ஒருவர், ஹெலிகாப்டர் தரையில் நொறுங்கி விழுந்தபோது அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் அல்லது பாதசாரி எனக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் அங்கிருந்த வாகனங்கள் மற்றும் சரக்கு பெட்டகங்களிலும் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

பேருந்து விபத்து

பேருந்து விபத்தும் தொடர் சோகமும்

முன்னதாக, மாலை 5:03 மணியளவில் நோர்ட்ஹாஃப் வீதியில் எஸ்.யு.வி (SUV) கார் ஒன்று மெட்ரோ பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

இந்த பேருந்து விபத்து குறித்த செய்திகளை நேரலையாகச் சேகரித்து ஒளிபரப்புவதற்காகவே இந்தச் செய்தி ஹெலிகாப்டர் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தது.

ஏற்கனவே பேருந்து விபத்து இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்திருந்ததால், ஹெலிகாப்டர் விபத்து பகுதிக்கு உடனடியாகச் சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட முடிந்தது.

இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT