Loading...
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பாகிஸ்தானுக்கு உரிமையில்லை! பாகிஸ்தான்-சீனா எல்லைக் குழுவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
பாகிஸ்தான்-சீனா எல்லைக் குழுவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பாகிஸ்தானுக்கு உரிமையில்லை! பாகிஸ்தான்-சீனா எல்லைக் குழுவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
09:40 am

செய்தி முன்னோட்டம்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான்-சீனா எல்லைக் கூட்டு ஆணையத்தின் தொடக்கக் கூட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அமைப்பிற்கு எந்தவித சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்றும், இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலப்பரப்பில் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவின் பிரித்தெடுக்க முடியாத பகுதிகள்

இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே எவ்வித எல்லையும் கிடையாது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாகவே எப்போதும் இருக்கும்.

இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் பகுதிகளில் எந்த மாற்றத்தைக் கொண்டு வர முயன்றாலும் அதனை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது." என்று திட்டவட்டமாகக் கூறினார்.

எல்லை ஒப்பந்தம்

1963 சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தமும் இந்தியாவின் தொடர் எதிர்ப்பும்

1947-48 போருக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்திய நிலப்பரப்பில், 1963-ல் பாகிஸ்தான்-சீனா இடையே கையெழுத்தான சட்டவிரோத எல்லை ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இதன் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளை சீனாவுக்குப் பாகிஸ்தான் சட்டவிரோதமாக தாரைவார்த்தது.

மேலும், இப்பகுதி வழியாக செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கும் இந்தியாவின் இறையாண்மையை மீறும் செயல் எனக் கூறி இந்தியா தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தியா எச்சரிக்கை

நாடகங்களை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்பு நிலங்களை உடனே வெளியேறுமாறு இந்தியா எச்சரிக்கை

எல்லை மேலாண்மை, வர்த்தகம் மற்றும் கூட்டு ஆய்வுகள் என்ற பெயரில் இரு நாடுகளும் இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, தங்களது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய நிலப்பரப்புகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் எச்சரித்தார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இந்த எல்லைக் குழுவை தங்களின் தூதரக மைல்கல்லாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இந்தியாவின் இந்தத் தீர்க்கமான பதில் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT