செமிகான் இந்தியா 2026: வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும்! பிரதமர் மோடி சிஇஓக்களிடம் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவது குறித்து முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் (சிஇஓக்கள்) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்நிலை ஆலோசனை நடத்தினார். இந்திய அரசின் கொள்கை ஆதரவு, அபரிமிதமான திறமைசாலிகள் மற்றும் வேகமான உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை குறித்து பேசிய பிரதமர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குவாண்டம் கணினி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பெற இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
திறன் பயிற்சி
செமிகண்டக்டர் 2.0 மற்றும் 1 கோடி பேருக்கு திறன் பயிற்சி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் சுமார் 1 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய அரசின் இலக்கிற்கு உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் ஒரு டி20 போட்டி போன்றது அல்ல, மாறாக நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒரு டெஸ்ட் போட்டி போன்றது என தொழில்துறை தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
செமிகான் 2.0 திட்டத்தின் கீழ் புதிய முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை இந்தியாவில் அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
செமிகான் இந்தியா 2026
டெல்லி யசோபூமியில் செமிகான் இந்தியா 2026 பிரமாண்ட தொடக்கம்
இதைத் தொடர்ந்து, டெல்லி துவாரகாவில் உள்ள யசோபூமி மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் செமிகான் இந்தியா 2026 மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
"சிலிகான் முதல் சிஸ்டம் வரை: சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்" (Silicon to Systems: Building the Ecosystem) என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இதில் 52 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 400 உயர் அதிகாரிகள் மற்றும் 50,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொழில்நுட்ப வல்லமை
சர்வதேச அரங்கில் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை
இம்மாநாட்டில் ஜப்பான், தென்கொரியா, மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகிய 6 நாடுகளின் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணலில் இருந்து சிலிகான் வரை சிப்கள் (Chips) உருவாகும் முழுமையான உற்பத்திப் பாதையை விளக்கும் 'Sand to Silicon to Systems' அனுபவ மண்டலமும் இதில் இடம்பெற்றுள்ளது.
செமிகண்டக்டர் துறையில் இந்தியாவை நம்பகமான உலகளாவிய கூட்டாளியாக சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பலமாகும்.