ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த தகவலின்படி, ராமேஸ்வர தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி, துறைமுக போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது சேரான் கோட்டைக்கும் புலித்தேநகருக்கும் இடையில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையினை அவர்கள் கண்டெடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பார்சலுக்கு 2 கிலோ வீதம் 10 பார்சல்கள் என மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு கடத்த முயற்சி ?
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பார்சல்களை கைப்பற்றி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக நேற்று முன்தினம் துறைமுக கடற்கரையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கஞ்சாக்கள் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம். படகில் ஏற்ற வைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் அந்த கஞ்சா பார்சல்களை கடலில் வீசிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடி இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.