LOADING...
டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்
ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்

டிரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா, ஜப்பான்; ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் சிக்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
10:14 am

செய்தி முன்னோட்டம்

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளே இதற்கு தயக்கம் காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளே அந்தப் பகுதியைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். "அமெரிக்கா இப்போது ஹார்முஸ் ஜலசந்தியை அதிகம் சார்ந்திருக்கவில்லை. சீனா போன்ற நாடுகள்தான் தங்களுக்குத் தேவையான பெரும்பான்மையான எண்ணெயை அங்கிருந்து பெறுகின்றன. எனவே, அவர்கள் தங்கள் சொந்தப் பகுதியை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வினை

டிரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள்

ஆஸ்திரேலியா:"நாங்கள் ஹார்முஸ் ஜலசந்திக்குக் கப்பல்களை அனுப்பப் போவதில்லை" என்று ஆஸ்திரேலிய அமைச்சர் கேத்தரின் கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வக் கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான்:தற்போதைய நிலையில் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டம் ஏதும் இல்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே முடிவெடுக்க முடியும் என ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் சனே தகைச்சி கூறியுள்ளார். தென்கொரியா:மிகுந்த எச்சரிக்கையுடன் ஆய்வு செய்த பின்னரே இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது. பிரிட்டன்:பிரிட்டிஷ் பிரதமர், ட்ரம்புடன் இது குறித்துப் பேசியுள்ளார். கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினாரே தவிர, கப்பல்களை அனுப்புவது குறித்து உறுதி அளிக்கவில்லை.

விலை

எண்ணெய் விலை உயர்வு

இந்த ஜலசந்தி வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இது ஈரானின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளது. போர் காரணமாக இந்தப் பாதை முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்காவின் பாதுகாப்பு கூட்டணியில் சேர எந்த நாடும் இதுவரை உறுதியான ஒப்புதலை வழங்கவில்லை.

Advertisement