முதல்வர் விஜய்- நடிகை திரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை
செய்தி முன்னோட்டம்
தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. நாளை சட்டமன்றத்தில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியை முடக்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாகக் கூறி திமுகவினர் குவிந்ததால் நீலாங்கரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பகல் 12 மணி வரை உதயநிதியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக திமுக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய நிலையிலும், தங்களுக்கு அத்தகைய உத்தரவு எதுவும் வரவில்லை எனக் கூறி காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
தாக்குதல்
தவெக அமைச்சர்களின் கடுமையான கண்டனம்
கைது செய்யப்பட்ட உதயநிதியை விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது.
உதயநிதியின் அநாகரீக விமர்சனத்திற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி, அடிப்படை மனித மாண்புகூட இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார்" என விமர்சித்துள்ளார்.
தவெக அமைச்சர் கீர்த்தனா, "அரசியல் மேடைகள் மக்களுக்கு வழிகாட்டும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் இடமாக மாறக்கூடாது. பெண்களை இழிவுபடுத்தும் அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்னை
காவிரிப் போராட்டமும் தொடரும் அரசியலும்
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், மேடையில் தொண்டர்கள் எழுப்பிய கூச்சலுக்கு அளித்த இரட்டை அர்த்த விளக்கமே இந்த மிகப்பெரிய சர்ச்சைக்கு விதையிட்டது.
இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த உடனடி கைது நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.