Loading...
ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரி கட்டுகிறோம்: உச்ச நீதிமன்ற கேள்விக்கு பிசிசிஐ பதில்
ஆண்டுதோறும் சராசரியாக ₹3,000 கோடி வருமான வரி செலுத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரி கட்டுகிறோம்: உச்ச நீதிமன்ற கேள்விக்கு பிசிசிஐ பதில்

எழுதியவர் Vasuki
Sep 19, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய விளையாட்டு ஆளுகைச் சட்டத்தின் கீழ் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஏன் கொண்டுவரக் கூடாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், பிசிசிஐ ஆண்டுதோறும் சராசரியாக சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு வருமான வரி செலுத்தி வருவதாக வாரியத்தின் செயலாளர் தேவஜித் சைகியா வெளிப்படுத்தியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பிசிசிஐயின் 95-வது வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின்பிற விளையாட்டுஅமைப்புகளைப் போல தாங்கள் அரசின் நிதியைச் சார்ந்து இயங்கவில்லை என்பதை இதன் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக வரி செலுத்தும் அமைப்பு

ரூ.3,000 கோடி வரி மற்றும் பொதுக்குழுவின் வரவேற்பு

வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை விவரித்த செயலாளர் தேவஜித் சைகியா, நாங்கள் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.3,000 கோடி அளவுக்கு அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம்.

இந்த விவரம் பொதுக்குழு கூட்டத்தில் வாசிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர் என்று தெரிவித்தார்.

உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களிலேயே பெரும் பணக்கார அமைப்பாக விளங்கும் பிசிசிஐ, அரசின் மானியங்களை எதையும் பெறாமல் நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் அமைப்புகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கி வருவது இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

தேவஜித் சைகியா விளக்கம்

விளையாட்டுச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற விசாரணை

தேசிய விளையாட்டு ஆளுகைச் சட்டம் 2025-ன் கீழ் பிசிசிஐ வருவதைத் தவிர்க்க முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இதுபற்றி பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கமளிக்கையில், இச்சட்டத்தின்கீழ் கிரிக்கெட் இன்னும் குறிப்பிட்ட விளையாட்டாக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றார்.

அரசுத் தரப்பில் உரிய அரசிதழ் அறிவிப்பு வெளியான அடுத்த கணமே புதிய விதிகளின்படி பிசிசிஐ செயல்படத் தொடங்கும் என்றும், அதுவரை வாரியத்தால் எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் கூறினார்.

மேலும், அக்டோபர் 27 அன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது வாரியம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT