Loading...
பாகிஸ்தானுக்கு அன்று இந்திய பிரியாணி; இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளின் தலைமை சமையல் கலைஞர்; யார் இவர்?
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தலைமை சமையல் கலைஞர் பீட்டர் ரைட்.

பாகிஸ்தானுக்கு அன்று இந்திய பிரியாணி; இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளின் தலைமை சமையல் கலைஞர்; யார் இவர்?

எழுதியவர் Vasuki
Sep 19, 2026
04:42 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச விளையாட்டு திருவிழாவில் உணவளிப்பது ஒரு முழுமையான உணவு அமைப்பை நிர்வகிப்பதற்குச் சமம் என்கிறார் ஆசிய விளையாட்டு போட்டிகளின் தலைமை சமையல் அமைப்பாளர் பீட்டர் ரைட். ஜப்பானில் நடைபெறும் அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 25 நாடுகளைச் சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் மற்றும் 200 ஊழியர்களுடன் இணைந்து காலை 5 முதல் நள்ளிரவு 1 மணி வரை இவர் உணவு வழங்கி வருகிறார். இங்கு வீரர்களுக்காக நாள்தோறும் 60 ஆயிரம் வாழைப்பழங்கள், ஒரு டன் அரிசி, இரண்டு டன் இறைச்சி மற்றும் 35 ஆயிரம் ரொட்டிகள் கொண்டு சுமார் 450 வகையான உணவுப் பதார்த்தங்கள் இவரது மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.

1992 உலகக் கோப்பை

பாகிஸ்தான் அணிக்கு 'இந்திய பிரியாணி' சமைத்த சுவாரசியம்

தனது 40 ஆண்டுகால அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரபல சமையல் கலைஞர் பீட்டர் ரைட், 1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வைப் பகிர்ந்தார்.

அப்போது இறுதிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி மதிய உணவாகப் பிரியாணி கேட்டது. பிரியாணி குறித்து அறியாததால், தன் இந்திய ஊழியரின் தாயாரை நேரில் வரவழைத்து சமைத்துக் கொடுத்துள்ளார்.

வெற்றிக்குப் பின் அதை ருசித்த மேலாளர், இது இந்தியப் பிரியாணி ஆனாலும் நன்றாக இருந்தது எனக் கூறினார்.

உணவு தயாரிப்பில் கலாச்சாரப் பாரம்பரியமும் உண்மைத் தன்மையும் எவ்வளவு முதன்மையானது என்பதை இந்த நிகழ்வே தனக்குக் கற்பித்ததாக அவர் தெரிவித்தார்.

கலாச்சார நுட்பங்கள்

ஹலால் உணவு நெறிமுறைகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கொரிய சமையல் கலைஞர் கொரிய சோயா சாஸ் கேட்பார், ஜப்பானியர் ஜப்பானிய சோயா சாஸும், சீன சமையல் கலைஞர் சீன சோயா சாஸும்தான் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்பதால், இதில் சமரசம் செய்யவே முடியாது என்கிறார் ரைட்.

மேலும், உணவு தயாரிப்பில் கலாச்சார மற்றும் மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தூரிகைகள் மாமிச உண்ணியான ரக்கூன் முடியால் செய்யப்பட்டிருப்பது தெரிந்ததும், அது ஹலால் விதிகளுக்கு முரணானது என்பதால் உடனடியாக அகற்றப்பட்டுச் செயற்கை இழைத் தூரிகைகள் மாற்றப்பட்டன.

ADVERTISEMENT

போட்டிக்குப் பிந்தைய விருந்து

வீரர்களின் கலோரி கட்டுப்பாடு 

பதக்கம் வெல்லத் துடிக்கும் வீரர்கள் தங்களின் உடல் எடையையும் கலோரியையும் துல்லியமாகக் கணக்கிட்டு உண்ணும் வகையில், உணவுப் பொருட்கள் தனித்தனி மூலப்பொருட்களாகவே சமையலறையில் வைக்கப்படுகின்றன.

இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் துல்லியமாகத் தேர்வு செய்து தட்டுகளில் நிரப்பிக் கொள்ள முடிகிறது.

கடுமையான உணவுப் பழக்கவழக்கத்தைக் கடைப்பிடிக்கும் தடகள வீரர்கள், போட்டிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்ததும் தங்களுக்குப் பிடித்தமான இனிப்புகள், கேக்குகள் மற்றும் பாலாடைக்கட்டிகளை வயிறார உண்டு மகிழ்வதாக பீட்டர் ரைட் சுவாரசியத்துடன் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT