நண்பர் அனுப்பினாலும் ஓபன் பண்ணாதீங்க; வாட்ஸ்அப் மூலம் பரவும் மால்வேர்; CERT-In எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களை இலக்கு வைத்துப் பரப்பப்படும் ஆபத்தான மால்வேர்கள் குறித்து இணையப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. நமக்குத் தெரிந்த நண்பர்கள், பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் மூலமாகவே இந்த தீங்கிழைக்கும் கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இன்வாய்ஸ்கள், சம்பள விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கைகள் போன்ற போர்வையில் அனுப்பப்படும் இந்த கோப்புகள் பயனர்களின் கணினிகளைப் பாதிப்படைய செய்கின்றன.
பாதிப்பு
பாதிக்கப்படும் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்கள்
குறிப்பாக வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் செயலியைப் பயன்படுத்துபவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
'Invoice 2026-09-15.iso', 'Statement of Account.zip' மற்றும் 'Salary Revision.rar' போன்ற பெயர்களில் வரும் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும்போது மால்வேர்கள் கணினியில் தானாகவே நிறுவப்படுகின்றன.
இந்த தாக்குதலின் மூலம் ஹேக்கர்கள் பயனர்களின் கணினியைத் தூரத்திலிருந்தே முழுமையாகக் கட்டுப்படுத்தும் ரிமோட் அக்சஸ் வசதியைப் பெறுகின்றனர்.
தீவிர எச்சரிக்கை
இந்தியாவின் CERT-In அமைப்பு விடுத்துள்ள தீவிர எச்சரிக்கை அறிவிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் கம்ப்யூட்டர் அவசரநிலைப் பதில் குழுவான CERT-In விரிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் இந்த கோப்புகளைத் திறப்பதன் மூலம் பயனர்களின் வங்கி பின் எண்கள், கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் ஆகியவை திருடப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட கணினியில் உள்ள பிற உணர்திறன் மிக்கத் தரவுகளையும் ஹேக்கர்கள் திருட முடியும் என்பதால் பயனர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆலோசனை
இணையப் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கும் அவசியமான பாதுகாப்பு ஆலோசனைகள்
நண்பர்களிடம் இருந்தே வந்தாலும் எதிர்பாராத விதமாக வரும் .zip, .rar, .iso மற்றும் .exe வடிவக் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து திறக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
சந்தேகத்திற்குரிய கோப்புகள் வந்தால் அனுப்பிய நபரைத் தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் வாட்ஸ்அப்பில் இருபடி சரிபார்ப்பு (Two-Step Verification) வசதியை செயல்படுத்துவதோடு, இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices) பிரிவை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையற்ற இணைப்பு சாதனங்களை நீக்க வேண்டும்.