Loading...
அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு
அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
07:34 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த அக்டோபர் 26 அன்று கைது செய்யப்பட்ட அவரிடம், நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இன்றுடன் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை

மத்திய குற்றப்பிரிவின் தீவிர விசாரணை

மூன்று நாள் காவலில் அன்பில் மகேஷிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, பெண் தொழிலதிபரும் ஆடை வடிவமைப்பாளருமான சண்முகப்பிரியா வீட்டில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.

முறைகேடாகப் பெறப்பட்ட பணம் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும், அவரது மனைவி ஜனனியிடம் விசாரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விசாரணையில் கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் இந்த வழக்கில் சிக்குவார்கள் எனப் போலீஸ் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிறை

நவம்பர் 6 வரை காவல்

விசாரணையின் முடிவில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, அன்பில் மகேஷை நவம்பர் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது, "காவலில் உணவு முறையாக வழங்கப்பட்டதா? துன்புறுத்தல்கள் ஏதேனும் நடந்ததா?" என நீதிபதி கேட்டதற்கு, "உணவு முறையாக அளிக்கப்பட்டது.

"தன்னை உடல் ரீதியாகவோ அல்லது மனதளவிலோ போலீசார் துன்புறுத்தவில்லை" என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT