பால் வளம், GM பொருட்களுக்கு ஒருபோதும் இறக்குமதி அனுமதி இல்லை: வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பால் வளம் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) விவசாயப் பொருட்களை எந்தவொரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) கீழும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடப் போவதில்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லி கிரோரி மால் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.
GM பொருட்கள்
பால் துறை மற்றும் GM பொருட்கள்: சமய & சமூக உணர்வுகளுக்கு மதிப்பு
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், பியூஷ் கோய, "வர்த்தக ஒப்பந்தங்களின் போது இந்தியா தனக்குச் சாதகமற்ற சூழலில் உணர்வுப்பூர்வமான துறைகளில் இதுவரை சமரசம் செய்துகொண்டதில்லை. பால் துறையைப் பொறுத்தவரை, இன்று வரை எந்த நாட்டுக்கும் கதவுகளைத் திறந்ததில்லை; இனிமேலும் திறக்க மாட்டோம்" என்றார்.
"மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்தவொரு பொருட்களையும் இந்தியாவிற்குள் அனுமதிக்க மாட்டோம். வெளிநாடுகளில் சீஸ் தயாரிக்கும் போது கன்றுகளின் வயிற்றிலிருந்து பெறப்படும் ரென்னெட் என்ற நொதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் அத்தகைய பால் சார்ந்த பொருட்களை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.
ஏற்றுமதி இலக்கு
ஜவுளி, மருந்துகள் மற்றும் 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு
இந்திய ஜவுளி, மருந்துகள், விவசாயப் பொருட்கள், ஆபரணக் கற்கள் மற்றும் நகைகளுக்கு சர்வதேச சந்தைகளில் குறைந்த இறக்குமதி வரிகள் கிடைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பு 2026-27 நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி இலக்கை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இந்தியா நிர்ணயித்துள்ளது.
முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 14% வளர்ச்சியடைந்து 480 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
எஞ்சியுள்ள 6 மாதங்களில் 520 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சீனா சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், இந்தியா அதை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் இறங்கும் என்றும், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.