மாணவர்களுக்கு ₹12,000 கல்வி உதவித்தொகை; NMMSS விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான பள்ளி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் NMMSS உதவித்தொகைக்கான விண்ணப்ப அவகாசத்தை மத்திய கல்வி அமைச்சகம் நீட்டித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சிப் பள்ளி மாணவர்கள் scholarships.gov.in என்ற தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் வரும் நவம்பர் 15, 2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் ஒருமுறை பதிவை (OTR) முழுமையாக நிறைவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
புதிய சரிபார்ப்பு காலக்கெடு
நிறுவன மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கான புதிய சரிபார்ப்பு காலக்கெடு
திருத்தப்பட்ட கால அட்டவணையின்படி, விண்ணப்பங்களை நிறுவன நோடல் அதிகாரிகள் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30, 2026 என்றும், மாவட்ட நோடல் அதிகாரிகள் சரிபார்ப்பதற்கான நாள் டிசம்பர் 15, 2026 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 90,483 புதிய விண்ணப்பங்களும், 1,99,531 புதுப்பித்தல் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களின் நிலையை ஆய்வு செய்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சரிபார்ப்புப் பணிகளை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மை நோக்கம்
ஆண்டுக்கு ₹12,000 நிதி உதவி மற்றும் திட்டத்தின் முதன்மை நோக்கம்
எட்டாம் வகுப்பிற்குப் பிறகு ஏழை எளிய மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைக் குறைத்து, அவர்கள் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தடையின்றி பயில்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தலா ₹12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்தொகையானது மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி பணப்பரிமாற்றம் முறையில் பாதுகாப்பாக செலுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பள்ளி மற்றும் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை விரைவாக சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 1, 2026 அன்று தொடங்கப்பட்ட இந்த விண்ணப்ப செயல்முறையைப் பயன்படுத்தி தகுதியுடைய அனைத்து ஏழை எளிய மாணவர்களும் பயன்பெற வேண்டும் எனக் கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் விடுபட்ட மாணவர்கள் உடனடியாக இணையதளத்தை பார்வையிட்டு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.