Loading...
ஒரே ஆண்டில் 400 டி20 சிக்ஸர்கள்: இந்திய கிரிக்கெட் அணி உலக சாதனை
ஒரு காலண்டர் ஆண்டில் 400 சர்வதேச டி20 சிக்ஸர்களை விளாசி உலக அளவில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

ஒரே ஆண்டில் 400 டி20 சிக்ஸர்கள்: இந்திய கிரிக்கெட் அணி உலக சாதனை

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
06:42 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எந்தவொரு அணியும் செய்யாத புதிய வரலாற்று உலக சாதனையை இந்திய அணி இன்று நிகழ்த்தி பெருமை படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அபாரமாக அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், நடப்பு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்களை விளாசிய உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற இமாலய சாதனையை தன்வசப்படுத்தி முத்திரை பதித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று மைல்கல்

ஹேமில்டனில் சிக்ஸர் மழை

ஹேமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டின் தனது 40-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 11 சிக்ஸர்களைப் பறக்கவிட்டது.

தொடக்க வீரர் இஷான் கிஷன் 5 சிக்ஸர்களையும், அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 சிக்ஸர்களையும், நிதீஷ் குமார் ரெட்டி ஒரு சிக்ஸரையும் விளாசிய நிலையில், 19-வது ஓவரில் பிளேர் டிக்னரின் பந்தில் நமன் திர் விளாசிய சிக்ஸர் மூலம் இந்தியா தனது 400-வது சிக்ஸர் மைல்கல்லை எட்டி வரலாறு படைத்தது. இந்த அதிரடி ஆட்டத்தின் பலனாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

சிக்ஸர் சராசரி உயர்வு

ஆஸ்திரியா சாதனை முறியடிப்பு

இதற்கு முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை ஆஸ்திரியா அணி (2025-ல் 326 சிக்ஸர்கள்) தன்வசம் வைத்திருந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட அணிகளில், 2022-ல் இந்தியா அடித்த 289 சிக்ஸர்களே உச்சபட்ச சாதனையாக இருந்தது.

கடந்த 2022-ல் ஒரு போட்டிக்குச் சராசரியாக 7.2 சிக்ஸர்கள் என ஆடிய இந்திய அணி, நடப்பு 2026-ஆம் ஆண்டில் போட்டிக்குச் சராசரியாக 10 சிக்ஸர்கள் எனத் தனது தாக்குதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்த 400 சிக்ஸர்களில் 142 சிக்ஸர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே அடிக்கப்பட்டவை என்பதும், ஒரு குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக ஒரே ஆண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் சாதனையாகப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஐபிஎல் ஆதிக்கம்

நவீன கிரிக்கெட் மாற்றம்

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால், அதாவது 2016-ல் இந்திய அணி 21 இன்னிங்ஸ்களில் வெறும் 81 சிக்ஸர்களை மட்டுமே அடித்திருந்தது.

ஆனால் தற்போதைய நவீன டி20 கிரிக்கெட்டில் பேட்டர்களின் அணுகுமுறை, தரமான பேட்கள் மற்றும் பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளங்கள் காரணமாக ஆட்டத்தின் வேகம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடர் மூலம் சர்வதேச அரங்கிற்குள் நுழைந்த அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நமன் திர் போன்ற இளம் அதிரடி பேட்டர்களின் ஆதிக்கமே இந்தியாவின் இந்த அபார சாதனைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் இந்த அசுர வேகத்தை பார்க்கும்போது, விரைவில் ஒரே ஆண்டில் 500 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லையும் ஒரு அணி எட்டுவது வெகுதொலைவில் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ADVERTISEMENT