ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: 53 இடங்கள் முன்னேறி வைஷ்ணவி சர்மா சாதனை
செய்தி முன்னோட்டம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி இந்திய மகளிர் அணி தொடரை வென்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய மகளிர் ஒருநாள் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக, இந்திய அணியின் 20 வயது இடதுகை இளம் சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடைசி இரண்டு போட்டிகளில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், மூன்றாவது போட்டியில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகி விருதையும் வென்று அசத்தினார்.
பந்துவீச்சு
பந்துவீச்சில் ஜொலித்த இந்திய வீராங்கனைகள்
வைஷ்ணவி சர்மாவைத் தொடர்ந்து மற்ற இந்திய பந்துவீச்சாளர்களும் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய பந்தில் துல்லியமாகப் பந்துவீசி 6 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் சாயலி சத்காரே, 18 இடங்கள் முன்னேறி 85-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதில் அவர் வீசிய 30 பந்துகள் டாட் பால்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வடோதராவில் நடைபெற்ற போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய கிராந்தி கௌட் ஒரு இடம் முன்னேறி 24-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே தரப்பில் முதல் பந்திலேயே யாஸ்திகா பாட்டியாவை ஆட்டமிழக்கச் செய்த நோம்வெலோ சிபான்டா 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
18-வது இடம்
பேட்டிங் வரிசையில் முன்னேற்றம்
பேட்டிங் தரவரிசையிலும் இந்திய தொடக்க வீராங்கனைகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.
ஜிம்பாப்வே தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசிய பிரத்திகா ராவல் 3 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தொடரின் கடைசி ஆட்டத்தில் 51 ரன்கள் விளாசிய அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 8 இடங்கள் முன்னேறி 65-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதேநேரம், ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீராங்கனை மொடஸ்டர் முபாசிகாவா 36-வது இடத்திற்கும், கேப்டன் ஜோசபின் என்கோமோ 49-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.