சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல்
வட தமிழக கடலோர மாவட்டங்களை, கடந்த இரண்டு நாட்களாக ஆட்டிப்படைத்து வந்த மிக்ஜாம் புயல் மழை சற்று ஓய்ந்து உள்ள நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், நடிகர் விஷால் இது குறித்து சென்னை மாநகராட்சியையும், மக்கள் பிரதிநிதிகளையும் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், புயல் வந்தால் அனைவரும் அறிந்தது போல், முதலில் வீதிகளில் தண்ணீர் தேங்கி, பின்பு வெள்ள நீர் வீட்டுக்குள் புகும் என்றும், அண்ணா நகரில் வசிக்கும் அவருக்கே இந்த நிலைமை என்றால், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் நிலைமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களை ஏன் வரி கட்ட வேண்டும் என கேட்கவைத்துவிடாதீர்கள் - விஷால்
மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை சுட்டிக்காட்டி, 8 ஆண்டுகளுக்கு பின் அதே நிலைமை நீடிப்பதால், இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சியை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதை, தான் ஒரு நடிகனாக கேட்கவில்லை எனவும், வாக்காளராக கேட்பதாகவும் கூறியுள்ளார். மக்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் சேவையை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது முக்கியமான பதிவு எனக் கூறியுள்ள நடிகர் விஷால், அரசாங்க அதிகாரிகள் மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் வரி கட்டுவதனால் அவர்களுக்கு உதவ வேண்டுமென கூறிய விஷால், மக்களை ஏன் வரி கட்ட வேண்டும் என கேட்கவைத்துவிடாதீர்கள் எனவும் தெரிவித்தார்.