கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோவையில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான நான்கு வழித்தடங்களில் ஆய்வு செய்தது. இதன்படி, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்தியமங்கலம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என நான்கு வழித்தடங்களில், 144கிமீ துாரத்துக்கு திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக அவிநாசி ரோடு மற்றும் சத்தியமங்கலம் ரோட்டில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து திட்டத்திற்கு அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு அனுப்பியது.
திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கான காரணம்
மெட்ரோ ரயில் கொள்கையின்படி, இந்தியாவில் எந்தவொரு நகரத்திலும் மெட்ரோ ரயில் அமைக்கும்போது அதற்கான விதிமுறைகளை கண்டிப்பான பின்பற்ற வேண்டும். இதன்படி, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் காம்ப்ரஹென்சிவ் மொபிலிட்டி பிளான் எனும் சிஎம்பியையும் அளிக்க வேண்டும். சிஎம்பி என்பது திட்டத்தில் முன்மொழிந்துள்ள வழித்தடத்தை ஒட்டி அருகில் உள்ள சிறிய வழித்தடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இயக்க திட்டமாகும். மேலும், திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வழித்தடம் பொருத்தமாக இல்லை என்றாலோ, கைவிடப்படும் சூழல் ஏற்பட்டாலோ வேறொரு புதிய வழித்தடத்திற்கான ஆய்வறிக்கையும் சேர்த்து அளிக்க வேண்டும். இந்த இரண்டு அறிக்கைகளும் இல்லாததால்தான் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு விரைவில் புதிய திட்ட அறிக்கையில் தேவையான மாறுதல் செய்து அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.