கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்
கோவை மாநகரில் நீதிமன்றம் மற்றும் சிறைக்கு கைதிகளை அழைத்து செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் கைதிகள் பலர் நீதிமன்றம் மற்றும் சிறைக்கு செல்லும் வழியில் காவலர்களோடு தகராறில் ஈடுபடுவதாகவும், தப்பி செல்ல முயற்சிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து சிறை கைதிகளை வழிக்காவல் எடுத்து செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா பொருத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 24 காவலர்களுக்கு இந்த தோள்பட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு, கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்திலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்
இந்நிலையில் கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தினை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'சிறை கைதிகளை அழைத்து செல்லும் காவலர்கள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் காட்சிகளை நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்க முடியும்' என்று கூறினார். 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வீடியோ, ஆடியோ உள்ளிட்ட இரண்டும் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். கோவை முழுவதும் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கும் விதத்திலும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் செலவில் 110 கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.