கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு
நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கோவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான அரசாணை கடந்த 2010இல் அப்போதைய திமுக அரசால் வெளியிடப்பட்டது. அதன்பிறகு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்த நிலையில், பணிகள் தாமதமானது. இந்நிலையில், இந்த திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட 472.32 ஏக்கர் நிலங்களை ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி ஆகஸ்ட் 16 அன்று விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலத்தை விமான நிலைய இயக்குனருக்கு மாற்றம் செய்வதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் பேட்டி
கடிதம் வழங்கிய பிறகு, இதுதொடர்பாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் விளக்க கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார் கூறுகையில், "திட்டத்திற்கு 634.82 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட வேண்டும். 468.83 ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை. 134.75 ஏக்கர் பிற துறைகளுக்கு சொந்தமானவை. 29.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம். இதில், முதற்கட்டமாக கையகப்படுத்திய 451.74 ஏக்கர் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 20.58 ஏக்கர் சேர்த்து 472.32 ஏக்கர் நிலம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களில் சில வழக்குகளாக உள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து நிலங்களையும் விரைவில் விமான நிலைய ஆணையத்திற்கு ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன." எனத் தெரிவித்தார்.
கோவை எம்பி ராஜ்குமார் பேட்டி
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிலங்களை ஒதுக்கும் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி நடராஜன் கூறியிருந்த நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கோவை எம்பி ராஜ்குமார், கம்யூனிஸ்ட்கள் பாலிசி வேறு, தங்கள் பாலிசி வேறு என அதை நிராகரித்தார். அவர் மேலும், "2010இல் திமுக விடுத்த அரசாணையை இத்தனை ஆண்டுகள் கழித்து திமுக முடித்து வைத்திருக்கிறது. தேர்தல் முடிந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நல்ல பரிசை நமக்கு அளித்திருக்கிறார். இதில் தொழில்துறை அமைச்சரின் பங்கும் முக்கியமானது. இனி மத்திய அரசு தான் திட்டத்தை வேகப்படுத்தி விரைவாக செய்து முடித்துத் தர வேண்டும்." என்றார்.