கோவை மாவட்டம் வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா வந்தோர் குளிக்கும் காரணத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதன்படி கடந்த 20ம் தேதி தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நேற்று(அக்.,23) மீண்டும் கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான பிரதீப்பால் சாமி என்பவர் அப்பர் ஆழியாறு அணையில் குளிக்கையில் மரணமடைந்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் அறிக்கை வெளியீடு
உடற்கல்வி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வால்பாறையில் அருவிகளில் மற்றும் ஆறுகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் நீரில் மூழ்கி இறப்பதை தவிர்க்கும் வகையில் 20 இடங்களில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதன்படி, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சோலையாறு ஆர்ச், 501 டனல், சேடல் அணை, இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, சின்னக்கல்லாறு, சோலையாறு அணை, அனலி நீர்வீழ்ச்சி, அப்பர் ஆழியாறு அணை, மானம்பள்ளி தங்கவேல் ஆறு, உள்ளிட்ட 20 இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.