மும்பை, பெங்களூருவில் OpenAI கிளைகள்; TCS நிறுவனத்துடன் மெகா டீல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் OpenAI நிறுவனம், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையை கைப்பற்றத் துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது. புதுடெல்லியில் ஏற்கனவே ஒரு அலுவலகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு மற்றும் நிதி தலைநகரான மும்பை ஆகிய நகரங்களில் புதிய கிளைகளை தொடங்க உள்ளது. இந்தியாவில் மட்டும் வாரத்திற்கு 10 கோடிக்கும் அதிகமானோர் ChatGPT-ஐ பயன்படுத்துவதாக OpenAI தெரிவித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக OpenAI நிறுவனத்தின் உலகின் இரண்டாவது பெரிய சந்தையாகவும், ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக, உலகிலேயே அதிகப்படியான மாணவர்கள் ChatGPT-ஐ பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது.
ஒப்பந்தம்
TCS உடன் கைகோர்த்த OpenAI
இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS உடன் OpenAI ஒரு முக்கிய கட்டமைப்பு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. OpenAI மற்றும் TCS இணைந்து 100 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை இந்தியாவில் உருவாக்க உள்ளன. இது எதிர்காலத்தில் 1 ஜிகாவாட் வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. டாட்டா குழுமம் தனது நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 'ChatGPT Enterprise' வசதியை வழங்க உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் AI வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும். மென்பொருள் உருவாக்கப் பணிகளில் OpenAI-ன் 'Codex' கருவியை பயன்படுத்தவும் TCS திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கை
சாம் ஆல்ட்மேனின் நம்பிக்கை
இந்தியாவின் மனித வளம் மற்றும் அரசின் ஏஐ கொள்கைகள் குறித்துப் பாராட்டிய OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன், "இந்தியா ஏற்கனவே ஏஐ பயன்பாட்டில் உலகிற்கு வழிகாட்டி வருகிறது. இந்தியாவிற்காக, இந்தியாவிலேயே, இந்தியாவோடு இணைந்து (With India, For India, In India) ஏஐ கட்டமைப்பை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.