நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு?
சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். சாதாரணமாக சாலையில் வெயிலிலும், ட்ராபிக்கிலும் சிக்காமல், சுகமாகவும், விரைவாகவும் பயணம் செய்ய மிகவும் உதவியாகவே உள்ளது இந்த மெட்ரோ ரயில் சேவை. அதற்கேற்றாற் போல, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலான இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு இந்த மெட்ரோ ரயில் சேவை மிக வசதியாக கருதப்படுவதால், 2ம்கட்ட மெட்ரோ ரயில்களுக்கான கட்டுமானப்பணிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. தற்போது இயங்கி வரும் ரயில் சேவை சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் (Blue line) வரையிலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் (Green line) வரையிலும் இயங்கி வருகிறது.
ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
தற்போது ப்ளூ லைன்களில் அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ இயங்கி வருகிறது. மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என இயக்கப்படுகிறது. அதே போல க்ரீன் லைன் மெட்ரோ ரயில்கள் 10 -30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கி வருகிறது. காலை 5 மணிக்கு துவங்கும் மெட்ரோ ரயில் சேவை, இரவு 11 வரை இயங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற IPL மேட்ச்சின் பொழுது, சேவை நேரம் நீடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, சென்னை விமான பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, விமான நிலையம் வரை இயங்கும் மெட்ரோ சேவைகளை 12 மணி வரை நீடிக்க மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.