LOADING...
'பகிரங்கமாக பொய் சொல்கிறார்'! வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவேசம்! அதிர வைக்கும் பின்னணி
வங்கதேச பயிற்சியாளர் முகமது சலாவுதீன் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை பொய்யர் எனச் சாடல்

'பகிரங்கமாக பொய் சொல்கிறார்'! வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவேசம்! அதிர வைக்கும் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த உதவிப் பயிற்சியாளர் முகமது சலாவுதீன், அந்நாட்டின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை கடுமையாகச் சாடியுள்ளார். 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு சென்று விளையாடாமல் இருக்க வங்கதேச கிரிக்கெட் வாரியமும் வீரர்களும்தான் முடிவெடுத்ததாக ஆசிப் நஸ்ருல் கூறியிருந்தார். இதனை பகிரங்கமான பொய் என்று குறிப்பிட்ட சலாவுதீன், ஒரு கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருப்பவர் இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆசிப் நஸ்ருல் டாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் நிலையில், அதை மனதில் வைத்து இவ்வாறு குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் கனவு

வீரர்களின் கனவு சிதைக்கப்பட்டதா?

உலகக்கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் வாழ்நாள் கனவு என்று குறிப்பிட்ட சலாவுதீன், இந்தப் புறக்கணிப்பால் வீரர்கள் மனரீதியாகப் பெரும் பாதிப்புக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளார். இந்த முடிவைக் கேட்டவுடன் இரண்டு வீரர்கள் பல நாட்களுக்கு அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். வீரர்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் அவர்களுக்குச் சரியான காரணத்தைக்கூட அரசாங்கம் விளக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த மன அழுத்தத்தில் இருந்த வீரர்களை மீண்டும் களத்திற்கு அழைத்து வந்து ரன் குவிக்க வைத்ததே தனது பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்ப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அரசியல் பின்னணி

புறக்கணிப்பிற்கான அரசியல் பின்னணி

இந்தியாவுடனான அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேசத்தின் முந்தைய இடைக்கால அரசாங்கம் வீரர்களை அனுப்ப மறுத்தது. ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதே இந்த மோதலின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுத்துவிட்டது. இதனால் வங்கதேசம் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சி பிரிவில் சேர்க்கப்பட்டது.

Advertisement

எதிர்காலம்

ஆட்சி மாற்றமும் எதிர்காலமும்

தற்போது வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றுள்ள சூழலில், இந்தியாவுடனான கிரிக்கெட் உறவுகளை மீண்டும் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவுடன் இணக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது. உலகக்கோப்பையை இழந்தாலும், வங்கதேச அணி வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement