Loading...
ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடியா? டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை
டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை

ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடியா? டொனால்ட் டிரம்ப் விதிக்கும் 'கார்டியன் ஏஞ்சல்' கட்டணத்தால் அதிரும் உலக கச்சா எண்ணெய் சந்தை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
07:57 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு, உலக அளவில் கச்சா எண்ணெய் விலையையும், கப்பல் போக்குவரத்தையும் வரலாறு காணாத வகையில் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். டிரம்பின் இந்த 20% திட்டத்தின்படி, கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு பிரம்மாண்ட சூப்பர்டாங்கர் கப்பலுக்கும் சுமார் 30 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 முதல் 270 கோடி) வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல் கூறுகிறது.

கணக்கீடு

ஒரு கப்பலுக்கு ரூ.270 கோடி கட்டணம்: கணக்கீடு எப்படி?

தற்போது உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தோராயமாக 80 டாலராக உள்ளது.

பொதுவாக பயன்படுத்தப்படும் சூப்பர்டாங்கர் கப்பல், சுமார் 20 லட்சம் பேரல் எண்ணெயைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஒரு கப்பல் சரக்கின் மொத்த மதிப்பு 160 மில்லியன் டாலர்.

அதிபர் டிரம்ப் கேட்கும் 20% கட்டணம், சுமார் 32 மில்லியன் டாலர் (ஒவ்வொரு பயணத்திற்கும் தோராயமாக 30 மில்லியன் டாலர்).

இதற்கு முன்னதாக, ஈரான் இதே பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒரு பயணத்திற்கு அதிகபட்சமாக 2 மில்லியன் டாலர் வரை மட்டுமே வசூலித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனுடன் ஒப்பிடுகையில் டிரம்ப் அறிவித்துள்ள தொகை 15 மடங்கு அதிகமாகும்.

பாதுகாவலன்

"நாங்கள் தான் கார்டியன் ஏஞ்சல்": டொனால்ட் டிரம்ப்

பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களின் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.

"நாங்கள் தான் ஹார்முஸ் ஜலசந்தியை எங்களின் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கப் போகிறோம். இந்த நீரிணையின் பாதுகாவலனாக அமெரிக்கா மாறும். வேண்டுமானால் எங்களை 'கார்டியன் ஏஞ்சல்' என்று கூட அழைக்கலாம். மிக ஆபத்தான இந்த சர்வதேச கடல்வழிப் பாதையைப் பாதுகாப்பதற்காக எங்களுக்கு நியாயமான முறையில் கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்."

இருப்பினும், இந்த இமாலயக் கட்டணத்தை எப்படி வசூலிப்பது என்பது குறித்தோ, அல்லது வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் இது குறித்து ஏதேனும் ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்தோ வெள்ளை மாளிகை இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

ஈரான்

ஈரான் - அமெரிக்கா கட்டணப் போட்டி

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து, தற்காலிக போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு (20%) எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெறும் இந்த ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற இரு நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன.

அமெரிக்காவின் இந்த சுங்கக் கட்டண முறையை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

"வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவர்களுக்குக் கட்டணம் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரிதான். ஆனால் டிரம்ப் கேட்கும் 20% என்பது மிக அதிகம். இந்த நீரிணையின் உண்மையான பாதுகாவலன் ஈரான்தான் என்பதால், நாங்கள் மிகவும் நியாயமான கட்டணத்தை வசூலிப்போம்" என்று அவர் அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT