LOADING...
AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு
அக்சென்சர் நிறுவனத்தில் இனி AI பயன்படுத்தினால் மட்டுமே பதவி உயர்வு

AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
09:50 am

செய்தி முன்னோட்டம்

பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர், தனது மூத்த ஊழியர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இனிவரும் காலங்களில், மூத்த மேலாளர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள், தங்களது தினசரி வேலைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், தலைமைப் பொறுப்புகளுக்குச் செல்ல ஏஐ பயன்பாடு மிக முக்கிய காரணியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றம்

பணிநீக்கங்களுக்குப் பின் ஒரு மாற்றம்

கடந்த சில ஆண்டுகளில் அக்சென்சர் நிறுவனம் சுமார் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களே பெரும்பாலும் நீக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஊழியர்களின் வெளியேற்றத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2 பில்லியன் டாலர்களை நிறுவனம் செலவிட்டுள்ளது. "நிறுவனங்கள் தங்களது செயல்பாட்டு முறைகளை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் ஊழியர்களை மறுசீரமைக்க முதலீடு செய்ய வேண்டும்" என்று அக்சென்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட் வலியுறுத்தியுள்ளார்.

ஐடி துறை

ஐடி துறையில் பரவும் கட்டாய ஏஐ பயன்பாடு

அக்சென்சர் மட்டுமல்லாமல், மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களும் இதே போன்ற கொள்கைகளை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன. மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, நிறுவனத்தின் ஏஐ திட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் வெளியேறலாம் என்று எச்சரித்துள்ளார். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும், ஏஐயைப் பயன்படுத்தாதவர்கள் பின்தங்கிவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அமேசான், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக உற்பத்தித்திறனைப் பெற நிறுவனங்கள் ஏஐயைத் தேர்ந்தெடுத்துள்ளன.

Advertisement

கண்காணிப்பு

கண்காணிப்பு முறை மற்றும் விலக்குகள்

ஊழியர்கள் உண்மையாகவே ஏஐயைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய அக்சென்சர் நிறுவனம் சிறப்பு கண்காணிப்பு முறையைக் கையில் எடுத்துள்ளது. ஊழியர்கள் 'AI Refinery' போன்ற நிறுவனத்தின் சொந்தமான ஏஐ தளங்களில் எத்தனை முறை லாக்-இன் செய்கிறார்கள் என்பது கண்காணிக்கப்படும். இருப்பினும், ஐரோப்பாவின் 12 நாடுகள் மற்றும் அமெரிக்க அரசாங்க ஒப்பந்தங்களைக் கையாளுபவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு இந்த விதிமுறை தற்போது பொருந்துமா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement