மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடந்ததது. தற்போது, அந்த அறிக்கை முழுவதுமாக முடிக்கப்பட்டு, வரும் ஜூலை 15ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து, திட்டப்பணிகள் குறித்து விளக்கியுள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மதுரை மெட்ரோ திட்டம் குறித்து சில தகவல்களை அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். அதன்படி, மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஒத்தக்கடை - திருமங்கலம் வரை 30 கி.மீ என வரையறுத்த நிலையில், தற்போது 32 கி.மீ ஆக ரயில் பாதை நீடிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது
திருமங்கலம் பேருந்து நிலையம், உச்சப்பட்டி, மதுரை ரயில் நிலையம், மாசி வீதி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடங்கள் போன்றவையும் இணைக்க பரிசீலிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில், மதுரை கல்லூரி மற்றும் வைகை ஆற்றின் அருகே வழித்தடம் அமைப்பதுதான் சவாலான விஷயம் என்றும், வைகை ஆற்றின் அருகே பூமிக்கடியில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக வைகை ஆற்று மண்ணின் மாதிரிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள பழமையான கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்காதவாறு மேம்பாலங்கள் எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்பணிகள் அனைத்துமே சித்திரை திருவிழாவை பாதிக்காதவாறு மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர். மேலும், இந்த தடத்தில் ஏற்கனவே அறிவித்திருந்த 18 ஸ்டேஷன்களை தற்போது 27 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.