சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இது போன்ற இன்னல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது தான் இந்த மெட்ரோ ரயில் சேவை. சென்னையில் மின்சார ரயிலில் பயணிப்பது போல் தற்போது மெட்ரோ ரயில் சேவையினையும் அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்குச்சக்கர வாகன நிறுத்தங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வாகன நிறுத்தங்களை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதோரும் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக பரங்கிமலை, கிண்டி, திரிசூர் உள்ளிட்ட நிலையங்களில் உள்ள வாகனநிறுத்தங்களை மின்சார ரயில்களில் பயணிப்போர் அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மெட்ரோ பயண அட்டை வைத்திருப்போருக்கு பழைய கட்டண முறையே தொடரும்
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையினை பயன்படுத்தாமல் வாகன நிறுத்தத்தினை மட்டும் பயன்படுத்துவோருக்கு பார்க்கிங் கட்டணத்தினை மெட்ரோ ரயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 மணிநேரம் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்துவோருக்கு கட்டணமானது ரூ.10ல் இருந்து ரூ.20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, 6ல் இருந்து 12 மணிநேரம் நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.30ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே 12 மணிநேரத்திற்கும் மேல் நிறுத்துவோருக்கு கட்டணமானது ரூ.20ல்இருந்து ரூ.40ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வானது வரும் ஜூன் 14ம்தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவில் பயணம் மேற்கொள்வதற்கான அட்டை வைத்திருப்போர் வாகனம் நிறுத்த பழைய கட்டணத்தை செலுத்தினாலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.