கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்
தமிழ்நாடு-கேரளா வழியே ரயில்கள் தினந்தோறும் இயங்கி வரும் நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து வாளையார் வரை, வனப்பகுதி வழியே 2 வழி ரயில் பாதை செல்கிறது. இப்பகுதி ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 6 முறை இதுபோன்று விபத்துகள் ஏற்பட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளில், மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. யானைகள் உயிரிழப்பதை தவிர்க்க, பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது. இப்பகுதிகளில் அதிவேகமாக ரயில்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இருந்தாலும் இரவு நேரங்களில் வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதால் விபத்துகளும் தொடர்ந்து ஏற்படுகிறது.
ரயில்களை இயக்கும் லோக்கோ பைலட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல்
இந்நிலையில் இரவுநேரத்தில் யானைகளின் நடமாட்டத்தை ரயில் பாதைகளில் கண்காணிக்க 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சர்வைலன்ஸ்' என்னும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள வழித்தடங்களில் சோதனை முயற்சியாக 12 இ-சர்வைலென்ஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் 24 தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கேமராக்கள் யானை நடமாட்டம் இருந்தால் அதனை புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புமாம். அதன்படி அத்தகவலை வனத்துறையினர் ரயில்வேத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பட்சத்தில், ரயில்களை இயக்கும் லோக்கோ பைலட்களின் போன்களுக்கு இதுகுறித்த தகவலும் எச்சரிக்கையும் பகிரப்படும். அவர்கள் ரயில்களின் வேகத்தினை குறைக்கப்படுவதன் மூலம் யானைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.