ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 50-100 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இது ஒப்புக்கொள்ளப்படும் பட்சத்தில், இஸ்ரேல் நாட்டு சிறைகளிலிருந்து 300 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவர்.
"நாங்கள் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட நெருங்கிவிட்டோம்" - ஹமாஸ் தலைவர்
"நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட நெருங்கி விட்டோம்" என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, டெலிகிராம் வாயிலாகச் கூறியதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது. பணைக் கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸ் அமைப்புடன் மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஹமாஸ் தலைவர் திங்களன்று கத்தாரில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவரான மிர்ஜானா ஸ்போல்ஜாரிக்கை சந்தித்து, காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை விரைவு படுத்த கூறியதாக கூறப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் நம்பிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் முடிவாகும் என அமெரிக்க அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன், "நான் நம்புகிறேன்" என தெரிவித்தார். அக்டோபர் 7 ஆம் தேதி, காசா மீது இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் தற்போது வரை, 7 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,200 அமெரிக்கர்கள் இன்னும் காசா பகுதிக்குள் இருப்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.
எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகள்
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட, 31 பச்சிளம் குழந்தைகள் எகிப்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போர் அறிவித்தது முதல், காசாவிற்குள் செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் தடை விதித்தது. அக்டோபர் 21 ஆம் தேதி முதல், எகிப்து எல்லை வழியாக காசா பகுதிக்குள், நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும், எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் மறுத்துவிட்டது. இதனால், அங்குள்ள மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் முடங்கின. அதேசமயம், அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக கூறி இஸ்ரேல் மருத்துவமனையை சோதனையிட தொடங்கியது. இதற்கு நடுவில், 31 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.