காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்
முற்றுகையிடப்பட்ட வடக்கு காசாவிலிருந்து காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி,"இஸ்ரேல் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஆம்புலன்ஸ்களின் கான்வாய்களை குறிவைத்ததாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கித்ரா தெரிவித்ததாக கூறுகிறது. தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ், ரஃபா கிராசிங்கில் பயணப்பட்ட கான்வாய் ஒன்றின் ஒரு பகுதியாகும் என்று கித்ரா மேலும் கூறியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் பயன்படுத்திய ஆம்புலன்ஸ்: IDF
இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) "ஹமாஸ் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸை" அடையாளம் கண்டு தாக்கியதாகக் கூறியுள்ளது. தீவிரவாதிகள் மற்றும் ஆயுதங்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றிச் சென்றதாக ஐடிஎஃப் குற்றம் சாட்டி, தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த ஆம்புலன்சில் நோயாளிகள் போர்வையில் பயணப்பட்ட ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக ஐடிஎஃப் கூறியது. "காசாவில் உள்ள இந்தப் பகுதி ஒரு போர் மண்டலம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி வெளியேறுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டார்கள்" என்று IDF தனது எக்ஸ்(முன்னாள் Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளது.
WHO தலைவர் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்
ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் பற்றிய செய்திகளுக்கு பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தான் முற்றிலும் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். அவ்வாறு குறிப்பிட்டு, காசாவில் போர் நிறுத்தத்திற்கான தனது அழைப்புகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். எனினும் அவரது கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தெரிவித்தார். முன்னதாக, காசாவின் மருத்துவமனைகள் "நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன" என்றும், "யாரையும் மறைக்க" பயன்படுத்தப்படுவதில்லை என்றும் காசா சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் CNNயிடம் தெரிவித்தார்.