திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் மேற்குக் கரைக்கு இன்று உயர் பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாலஸ்தீன அதிகாரசபை பகிர்ந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்படும் வன்முறைகள் குறித்த உலகளாவிய கவலை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க உயர்மட்ட அதிகாரி பிளிங்கன், அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார். ஒரு மாதத்திற்கு முன், இஸ்ரேஸ் மீது பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது. இதனால், 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் 4 வாரங்களாக பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
பிளிங்கன் மேற்குக் கரைக்கு செல்வது இது தான் முதல் முறை
4 வாரங்களாக இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் மீது நடத்தி வரும் தாக்குதலில் 9500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த பாலஸ்தீனியர்களில் மூன்றில் 2 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். இந்த போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்கு மூன்று பயணங்களை மேற்கொண்டதுடன் பல அரபு நாடுகளுக்கும் இந்த போர் குறித்து விவாதிக்க சென்றார். ஆனால், இந்த போர் தொடங்கிய பிறகு அவர் மேற்குக் கரைக்கு செல்வது இது தான் முதல் முறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது இந்த பயணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜோர்டான் மற்றும் இஸ்ரேலுக்கு சென்றிருந்த அவர், இன்று மேற்கு கரைக்கு சென்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் சந்தித்திருக்கிறார்.