LOADING...
யாருக்கு அந்த தங்கக் கோப்பை? டி20 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதுக்கு சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 8 வீரர்கள் பரிந்துரை
டி20 உலகக்கோப்பை 2026 தொடர் நாயகன் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியீடு

யாருக்கு அந்த தங்கக் கோப்பை? டி20 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதுக்கு சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 8 வீரர்கள் பரிந்துரை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
10:37 am

செய்தி முன்னோட்டம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்திய 8 வீரர்களை தொடர் நாயகன் விருதுக்காக ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரருக்கு ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாக்களிக்கலாம் என்று ஐசிசி அறிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

#1

சஞ்சு சாம்சன் (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கும் சஞ்சு சாம்சன், வெறும் 4 போட்டிகளில் விளையாடி 232 ரன்களைக் குவித்துள்ளார். இவரது சராசரி 77.33 மற்றும் ஸ்டிரைக் ரேட் 201.73 ஆக இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக 97* ரன்களும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் குவித்துத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

#2

வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ், 8 போட்டிகளில் 226 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கி 176.56 ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக ரன்களைக் குவித்த இவர், இத்தாலிக்கு எதிராக 22 பந்துகளில் 53* ரன்கள் எடுத்து அணியை மீட்டெடுத்தார். பந்துவீச்சிலும் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராகத் திருப்புமுனைகளை ஏற்படுத்தினார்.

Advertisement

#3

சாகிப்சதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பல்வேறு டிராமாவிற்கு பிறகு உலகக்கோப்பையில் பங்கேற்ற நிலையில், சூப்பர் 8 சுற்று வரை முன்னேறியது. அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறினாலும், தொடக்க வீரர் ஃபர்ஹான் 383 ரன்கள் குவித்துச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் ஒரே தொடரில் இரண்டு சதங்கள் (இலங்கை மற்றும் நமீபியாவுக்கு எதிராக) அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

#4

லுங்கி என்கிடி (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்கிடி, 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கனடாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுக்காவிட்டாலும் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார்.

#5

எய்டன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்க்ரம் 8 போட்டிகளில் 286 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான கடினமான இலக்குகளைத் துரத்தும்போது 86* ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். பந்துவீச்சில் இவர் வீழ்த்திய ஒரே விக்கெட் இந்திய வீரர் இஷான் கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

#6

ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தியுள்ளார். 8 போட்டிகளில் 128 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இலங்கைக்கு எதிராக 32 ரன்கள் மற்றும் 4/27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல் ரவுண்டராகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

#7

ஷாட்லி வான் ஷால்க்விக் (அமெரிக்கா)

அசோசியேட் அணிகளில் ஒன்றான அமெரிக்க கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், வான் ஷால்க்விக் 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிராக தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதுக்கு இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

#8

டிம் சீஃபர்ட் (நியூசிலாந்து)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சீஃபர்ட் 8 போட்டிகளில் 274 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரையிறுதியில் இவர் அடித்த 58 ரன்கள், நியூசிலாந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற மிக முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களில் ஒருவருக்கு இறுதியாக தொடர் நாயகன் விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement