'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு
ஐநா.,பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்தும், அதனால் அப்பகுதியின் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்து வருவது குறித்தும் விவாதம் செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய ஐநா.,விற்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதியான ரவீந்திரன், "இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட இருத்தரப்பினரும் தங்கள் நேரடி பேச்சுவார்த்தையினை மீண்டும் துவங்கி, போர் நிறுத்தத்தினை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அவர், "கல்வி, தொழில் முனைவு, சுகாதாரம், போன்ற பல துறைகளை கொண்ட இருதரப்பு வளர்ச்சி மேலாண்மை மூலம் பாலஸ்தீனம்-காசா மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்" என்றும், "இந்த போருக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் காசா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து அனுப்புவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ளும்" என்றும் தெரிவித்துள்ளார்.
'பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' - ரவீந்தரன்
மேலும் அவர், "தற்போது நடந்து வரும் போர் தாக்குதல்களில் ஏற்படும் பொதுமக்களின் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து கவலையளித்து வருகிறது. பொதுமக்கள் அதுவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் எடுத்துரைத்துள்ளார். அதன்படி, பாலஸ்தீனிய மக்களுக்கு, கிட்டத்தட்ட 32 டன் எடைகொண்ட பேரிடர் நிவாரணப்பொருட்கள் ராணுவ விமானம் மூலம் இந்தியா கடந்த 22ம் தேதி அனுப்பியுள்ளது. அதோடு கிட்டத்தட்ட 6.5 டன் எடைக்கொண்ட மருத்துவ உதவியளிக்கும் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 7ம் தேதி இந்த போர் துவங்கியது. இது குறித்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் தரப்பு நேரடி பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.