காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
நேற்று இரவு காசா பகுதியில் உள்ள இணையம் மற்றும் தகவல்தொடர்புகளை இஸ்ரேல் முற்றிலுமாக முடக்கியதை அடுத்து, அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் வெளி உலகத்துடனான தொடர்பை பெருமளவு இழந்தனர். மேலும், தங்களுக்குள் தொடர்புகொள்ளும் சாத்தியதையும் பாலஸ்தீன மக்கள் இழந்துள்ளனர். இதற்கிடையில், காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் தெற்கு இஸ்ரேஸ் மீது பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதனால், 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் மூன்று வாரங்களாக பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று நடந்த தாக்குதலில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது தெரியவில்லை
நேற்று இரவு காசா மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதனால், பாலஸ்தீன மக்களுக்கு வழங்குபட்டு வந்த இணையம், செல்லுலார் மற்றும் லேண்ட்லைன் சேவைகளில் முழுமையான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியின் தொலைத்தொடர்பு வழங்குநரான பால்டெல் தெரிவித்துள்ளது. இந்த இணைய துண்டிப்பால் நேற்று நடந்த தாக்குதலில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பதை உடனடியாக அறிய முடியவில்லை. இருப்பினும், இணையம் முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பின்னும் சில செயற்கைக்கோள் போன்கள் தொடர்ந்து நன்றாக செயல்பட்டன. மூன்று வாரங்களுக்கு முன்பே காசா பகுதியின் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இணையமும் இல்லாமல், காசா பகுதியை முழுமையான இருள் சூழுந்துள்ளது. இதற்கிடையில், தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சித்து வருகிறது.