இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஒப்புக்கொண்ட ஹமாஸ் வீரர்
இஸ்ரேலி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றதாக ஹமாஸ் வீரர் கூறும் வீடியோவை, இஸ்ரேலின் ஷின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸின் நுக்பா சிறப்புப் படையின் வீரரான உமர் சாமி மர்சுக் அபு ருஷா, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுடன் நடைபெற்ற மோதலில் தோற்று சரணடைந்தார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவிய தாக்குதலை தொடுத்த ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் தரை வழியாகவும் ஊடுருவியது. இந்த ஊடுருவலின் போது, ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,500க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 230க்கும் மேற்பட்டோர் காசாவிற்கு பிணையை கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
ஒவ்வொரு வீடாகச் சென்று இஸ்ரேலிகளை கொன்ற நுக்பா வீரர்கள்
தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்பட்டு வரும் அபு ருஷா, பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். "கொலை செய்வது மட்டுமே வேலை. நாங்கள் கடத்தக்கூடாது, கொல்ல வேண்டும். பார்க்கும் ஒவ்வொரு நபரையும் கொன்றுவிட்டு, திரும்பி வர வேண்டும்." என உத்தரவிடப்பட்டிருந்ததாக ருஷா கூறியுள்ளார். அவர் செய்த கொலைகளை பற்றி கூறியவர், "நாங்கள் முதல் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் அங்கு சோதித்த போது, அங்கு யாரும் இல்லை. ஹம்சே எ-ஜரத் வெளிப்புற அறையை எரித்தார். அப்போது யாரோ ஒருவர் தண்ணீர் குழாயுடன் பின்புறம் உள்ள தோட்டத்தை நோக்கி வெளியே வந்தனர். அபு அகமது மற்றும் ஹம்சே அவரைச் சுட்டுக் கொன்றனர்" என தெரிவித்தார்
பாதுகாப்பு அறையில் இருந்த குழந்தைகளை கொன்றோம்
இவ்வாறு மேலும் இரண்டு வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அங்கு இருந்தவர்களை சுட்டுக் கொன்று, வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், விசாரணையில் அபு ருஷா தெரிவித்துள்ளார். "பின்னர், நாங்கள் எங்கள் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்தோம்" "நாங்கள் வீட்டைச் சுற்றி பார்த்தோம், பாதுகாப்பான அறையில் இளம் குழந்தைகளின் சத்தம் கேட்டது" "அந்த அறையில் சத்தம் நிற்கும் வரை அந்த அறையை நோக்கி சுட்டோம்" என அபு ருஷா குழந்தைகளை கொன்றதை உறுதிப்படுத்தியுள்ளார். நுக்பா அதிகாரிகள், பார்க்கும் அனைவரையும் கொல்ல உத்தரவிட்டதாக, அபு ருஷா தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஹமாஸ் குழுவில் இணைந்தது அவரின் குடும்பத்திற்கு தெரியாது எனவும், அவரது குடும்பத்தினர் அறிந்தால் அவரை கொன்று விடுவார்கள், எனவும் அபு ருஷா கூறியுள்ளார்.