இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து நேற்று, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உடன் உரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எகிப்து அதிபரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மேற்காசியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலை குறித்து பேசினார். இருநாட்டு தலைவர்களும், அப்பகுதியில் இப்போரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை உள்ளிட்டவற்றை குறித்து பரஸ்பரம் கவலை தெரிவித்துக்கொண்டனர். மேலும் அங்கு விரைவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை திரும்ப வேண்டும் என்றும், எளிதாக நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். இப்போரால் 1,400 இஸ்ரேலிகளும், 8,000 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.