மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஈரான் -இஸ்ரேல் போரில் சர்வதேச நாடுகளின் ஆதரவு யாருக்கு?
செய்தி முன்னோட்டம்
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. "ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் இலக்கு எட்டப்படும் வரை தொடரும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில், உலக நாடுகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்ற பட்டியல் இதோ:
இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி: பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் பதிலடித் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். பிரிட்டன் தனது தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. அரபு நாடுகள்: ஆச்சரியமான திருப்பமாக, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கடுமையாக சாடியுள்ளன. EU: கமேனியின் மரணம் ஈரானின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கனடா, இத்தாலி, உக்ரைன்: இந்த நாடுகள் ஈரானின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அமெரிக்காவின் நடவடிக்கையை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்துள்ளன.
ஈரான்
ஈரானிற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்
ரஷ்யா: அதிபர் விளாடிமிர் புடின் கமேனியின் கொலையை "நாகரிகமற்ற படுகொலை" என்று விமர்சித்துள்ளார். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு என ரஷ்யா சாடியுள்ளது. சீனா: ஈரானின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சீனா, உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா: ஈரானின் நீண்டகால நட்பு அமைப்பான ஹிஸ்புல்லா, கமேனி கொலைக்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியுள்ளது.