மகுடத்திற்கான மல்லுக்கட்டு! டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கான தேதி, நேரம் மற்றும் முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2026 டி20 உலகக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய நான்கு அணிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது. குரூப் 1 இல் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவும், குரூப் 2 இல் இருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறி பட்டத்திற்கான போட்டியில் களமிறங்குகின்றன.
முதல் அரையிறுதி
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து
தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 4 ஆம் தேதி (புதன்கிழமை) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூப்பர் 8 சுற்றில் தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்த பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ரன் ரேட் அடிப்படையில் வீழ்த்தி முன்னேறிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும்.
இரண்டாவது அரையிறுதி
இந்தியா vs இங்கிலாந்து
மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குரூப் 2 இல் முதலிடம் பிடித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், குரூப் 1 இல் இரண்டாம் இடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி மார்ச் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2022 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா சந்தித்த தோல்விக்கு பழிவாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. வான்கடே மைதானம் இந்திய அணிக்குச் சாதகமான களம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் போட்டியும் இரவு 7:00 மணிக்குத் தொடங்கும்.
இறுதிப்போட்டி
இறுதிப்போட்டி குறித்த விவரங்கள்
அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், மார்ச் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக மோதும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் 2026 ஆம் ஆண்டின் டி20 உலகக்கோப்பை வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். தற்போது இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஃபார்ம் சிறப்பாக இருப்பதால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பல கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.