Loading...
அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஒன்ப்ளஸ் மூட்டை முடிச்சை கட்டுகிறது? இந்தியாவுக்கும் விரைவில் எண்ட் கார்டு
ஒன்ப்ளஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரமே வெளியேறுகிறது

அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஒன்ப்ளஸ் மூட்டை முடிச்சை கட்டுகிறது? இந்தியாவுக்கும் விரைவில் எண்ட் கார்டு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2026
11:09 am

செய்தி முன்னோட்டம்

ஸ்மார்ட்போன் உலகில் தொழில்நுட்ப ஆர்வலர்களால் 'பிளாக்ஷிப் கில்லர்' என்று கொண்டாடப்பட்ட ஒன்ப்ளஸ் பிராண்ட், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்த வாரமே தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையின்படி, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒப்போ மேற்கொண்டு வரும் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் தனது ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் வணிகத்திலும் சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச சந்தைகளில் ஒன்ப்ளஸ் சந்தித்த மந்தமான விற்பனை வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மற்ற காரணங்கள்

வெளியேறுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

அமெரிக்க சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒன்ப்ளஸ் நிறுவனத்தால் முறியடிக்க முடியவில்லை.

அங்கு மோட்டோரோலா, கூகுள் பிக்சல் போன்ற பிராண்டுகளுக்கு பின்னாலேயே ஒன்ப்ளஸ் தள்ளப்பட்டது.

அமெரிக்காவில் சீன பிராண்டுகளுக்கு எதிராக நிலவும் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடியதாக ஆப்பிள் நிறுவனம் ஒன்ப்ளஸ் மீது தொடர்ந்துள்ள சட்டபூர்வ வழக்கு ஆகியவை இந்த வெளியேற்றத்தை வேகப்படுத்தியுள்ளன.

சர்வதேச அளவில் மெமரி சிப் தட்டுப்பாடு மற்றும் உதிரிபாகங்களின் விலை 20-30% வரை உயர்ந்துள்ளதால், பட்ஜெட் விலையில் ஒன்ப்ளஸ் நார்ட் போன்ற போன்களை லாபகரமாக தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியாவுக்கு எப்போது எண்ட் கார்டு?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த வாரமே ஒன்ப்ளஸ் முடக்கப்பட்டாலும், இந்தியாவின் நிலை சற்று வேறுபட்டது.

இந்தியாவில் ஒன்ப்ளஸ் பிராண்டுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதால், உடனடியாக மூடப்படாது.

இருப்பினும், ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, சீனாவுக்கு வெளியே உள்ள அனைத்து உலகளாவிய சந்தைகளையும் Oppo மூடத் திட்டமிட்டுள்ளதால், 2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்தும் ஒன்ப்ளஸ் பிராண்ட் முழுமையாக விடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கான பிரத்யேக சேவை மையங்கள் மூடப்பட்டு, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒப்போவின் சேவை மையங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஒன்ப்ளஸ் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ஒப்போ தயாரிப்புகளின் விளம்பர பேனர்கள் மாற்றப்பட்டு, ஒப்போ போன்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

மற்ற பிராண்டுகள்

மற்ற பிராண்டுகளின் நிலை என்ன?

ஒப்போவின் இந்த மறுசீரமைப்பில், அதன் மற்றொரு துணை பிராண்டான ரியல்மி, சீன உள்நாட்டுச் சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது.

அதற்கு பதிலாக ஃபின்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் போன்ற நோர்டிக் நாடுகளை மட்டும் ரியல்மி இலக்காகக் கொள்ளும்.

அதே நேரத்தில், ரியல்மி பிராண்ட் இந்தியாவில் தொடர்ந்து செயல்படும் என்று தெரிகிறது.

தற்போது கையில் ஒன்ப்ளஸ் போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்டுகள் மற்றும் சர்வீஸ் சப்போர்ட் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்போ சேவை மையங்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் பிராண்ட் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும் போது இந்த வியூகங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவரும்.

ADVERTISEMENT